இன்றைய அவசர உலகில் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நமது விரல் நுனியில் எல்லாம் கிடைக்கிறது. ஒரு மெயில் அனுப்ப வேண்டுமா அல்லது கற்பனைக்கு எட்டாத ஒரு படத்தை உருவாக்க வேண்டுமா? “ஏஐ” (AI) இருக்கவே இருக்கிறது. ஒரு நொடியில் நம் வேலைகளை முடித்துத் தரும் இந்த மாயாஜாலத் தொழில்நுட்பத்திற்குப் பின்னால், பூமிக்கே ஆபத்தான ஒரு ‘தாகம்’ ஒளிந்திருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நமது ஒரு சின்ன கமாண்டுக்காக (Command) ஏஐ மென்பொருள்கள் பல லிட்டர் தண்ணீரை அப்படியே குடித்து விடுகின்றன. இது ஏதோ மிகைப்படுத்தப்பட்ட தகவல் அல்ல, சமீபத்திய ஆய்வுகள் சொல்லும் அதிர வைக்கும் உண்மை.
நெருப்பைக் கக்கும் சர்வர்கள்
நமது வீட்டில் உள்ள சாதாரண லேப்டாப்பை இரண்டு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தினாலே அது சூடாகிவிடும். அப்படியென்றால், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ‘ஏஐ சர்வர்கள்’ (AI Servers) எவ்வளவு வெப்பத்தை வெளியிடும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இந்த ராட்சச இயந்திரங்கள் உருகிவிடாமல் இருக்க, அவற்றை 24 மணி நேரமும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்காகவே பிரத்யேகமான ‘கூலிங் டவர்கள்’ (Cooling Towers) அமைக்கப்பட்டு, இயந்திரங்களின் மீது இடைவிடாமல் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் 2024-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அறிக்கைப்படி, 2023-ல் மட்டும் அவற்றின் டேட்டா சென்டர்களைக் குளிர்விக்க சுமார் 610 கோடி கேலன் நன்னீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகம்!
ஏன் சுத்தமான தண்ணீர்?
“இயந்திரத்தைக் குளிர்விக்க எதற்கு நல்ல தண்ணீரை வீணாக்க வேண்டும்? கழிவுநீரைப் பயன்படுத்தலாமே?” என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அங்கதான் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. கழிவுநீரில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் இருக்கும். இதைப் பயன்படுத்தினால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்த இயந்திரங்களில் உப்புப் படிந்து அவை சீக்கிரமே பழுதாகிவிடும்.
இதனால், வேறு வழியின்றி மனிதர்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் சுத்தமான நன்னீரையே இந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், இயந்திரங்களைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 80 சதவீதம் அப்படியே ஆவியாகி காற்றில் கலந்துவிடுகிறது. அதை மீண்டும் பயன்படுத்தவே முடியாது.
எதிர்காலப் பயம்
இந்த ஏஐ வளர்ச்சி இப்படியே போனால், வரும் 2028-ம் ஆண்டிற்குள் இந்தத் தண்ணீர் தேவை 11 மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சராசரி டேட்டா சென்டர் என்பது, சுமார் 50,000 மக்கள் பயன்படுத்தும் தண்ணீரை அசுர வேகத்தில் குடித்துத் தீர்க்கிறது.
ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் மக்கள் ஒரு குடம் குடிநீருக்காக மைல் கணக்கில் நடக்கும் சூழலில், இந்தத் தொழில்நுட்பப் பசி எதிர்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. வசதிகள் பெருகும் அதே வேளையில், இயற்கை வளங்கள் காணாமல் போவது கவலைக்குரிய விஷயம் தான்.

Related Posts
செய்தித் திருட்டைத் தடுக்கும் ஊடகப் படை: AI உலகிற்கு சவால் விடும் ‘தேர்ட் வே’!
வானொலி முதல் ஏஐ வரை:டெலிமெடிசினின் உலகளாவிய பயணமும் இந்தியப் புரட்சியும்!
ஏஐ என்னும் டிஜிட்டல் அசுரன்: மனிதகுலம் சந்திக்கும் வரலாற்றுப் பெருங்கிலி!