“கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்” என்பார்கள். கணக்கில்லாத பணம் கையில் வந்தால், மனித மனம் எப்படி நடந்துகொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அப்படிப்பட்ட அபரிமிதமான செல்வத்தை பெற்றிருந்தும், மண்ணையும், மக்களையும், நாட்டையும் பற்றி சிந்திக்கும் ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எத்தனை பெரிய மனிதர் என்பதை நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு போற்றுதலுக்குரிய நபர் தான் ஸ்ரீதர் வேம்பு – சோகோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.
அதாவது 18000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகரங்களில் சொத்துக்கள் வாங்கலாம், சொந்தமாக ஒரு தீவு வாங்கலாம், அல்லது வெறும் 300 கோடி ரூபாயில் ஒரு ஜெட் விமானத்தை சொந்தமாக்கலாம். இன்றைய கோடீஸ்வரர்களுக்கு, தங்கள் பிள்ளைகளுக்கு கார் ஓட்ட பழக்குவதற்கு மாருதி கார் வாங்குவது போல, ஜெட் விமானம் வாங்குவதும் ஒரு சாதாரண விஷயமாகவே தோன்றுகிறது. தமிழகத்தின் முன்னணி குடும்பங்களும், தொலைக்காட்சி அதிபர்களும் ஜெட் விமானங்களை சொந்தமாக வைத்திருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் இந்த ஸ்ரீதர் வேம்பு என்னும் ஒரு தன்னம்பிக்கை மிக்க ஊக்க மனிதரின் லட்சியமே தனி.

உலகின் மென்பொருள் தொழில்நுட்ப மையமான கலிபோர்னியாவை விட்டு, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தளம்பாறை என்ற சிறு கிராமத்தில் தனது நிறுவனத்தின் அலுவலகத்தை அமைக்க முடிவு செய்தது ஒரு சாதாரண முடிவல்ல. இது ஒரு துணிச்சலான, தொலைநோக்கு பார்வை கொண்ட முடிவு. இதற்காக அவர் தனது நிறுவனத்தில் எத்தனை பேரை சம்மதிக்க வைத்திருக்க வேண்டும்? எத்தனை சவால்களை எதிர்கொண்டிருக்க வேண்டும்? ஆனால், அந்த முடிவை அவர் உறுதியாக எடுத்தார், செயல்படுத்தினார், இன்று தென்காசி என்ற சிறு நகரம் உலக அரங்கில் ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறது.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த முடிவு தென்காசி பகுதியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சோகோ கார்ப்பரேஷன் இன்று தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக சம்பளம் வழங்கும் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. இதன் மூலம், அப்பகுதியின் பொருளாதாரம் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதை தனது பிரதான குறிக்கோளாகக் கொண்டு, சோகோ பள்ளிகளை நிறுவி, உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கி வருகிறார். இதன் மூலம், எதிர்காலத்திற்கு தேவையான மென்பொருள் பொறியாளர்கள் இங்கிருந்தே உருவாகி வருகின்றனர்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சோகோவின் தென்காசி அலுவலகத்தில் பணிபுரியும் பல இளைஞர்களுக்கு கல்லூரி பட்டம் கூட இல்லை. அவர்களுக்கு மென்பொருள் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்ற இரு பெரும் சவால்களை ஒரே நேரத்தில் தீர்க்கும் அற்புதமான முயற்சி. மத்தளம்பாறை கிராமத்தில், வெள்ளை வேட்டி மற்றும் சாதாரண சட்டையணிந்து, சைக்கிளில் சுற்றித்திரியும் ஒருவரை நீங்கள் பார்க்கலாம். அவர்தான் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகள் கொண்ட, 9000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட, 18000 கோடி ரூபாய் மதிப்புள்ள சோகோ கார்ப்பரேஷனின் தலைவர் – ஸ்ரீதர் வேம்பு. இந்த எளிமையும், மக்களோடு மக்களாக வாழும் பண்பும் அவரை ஒரு உண்மையான மக்கள் தலைவராக உயர்த்துகிறது.
ஒரு நேர்காணலில் ஸ்ரீதர் வேம்பு: அவரது பார்வை
ஸ்ரீதர் வேம்பு, தனது பேட்டிகளில் எப்போதும் எளிமையையும், சமூக முன்னேற்றத்தையும் வலியுறுத்தி பேசுபவர். ஒரு நேர்காணலில் அவர் கூறியது இதோ:
“நான் பணத்தை ஒரு செல்வமாக பார்க்கவில்லை. உண்மையான செல்வம் என்பது திறமைகளில் இருக்கிறது – நமது பிரச்சினைகளை தீர்க்கும் திறன், பெரிய விஷயங்களை சாதிக்கும் திறன். பங்குச் சந்தை மதிப்பு ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது முதன்மையான இலக்காக இருக்கக்கூடாது. நாம் அதை முதன்மையாக்கும்போது, உண்மையில் முக்கியமானவற்றை மறந்துவிடுகிறோம்.” இந்த வார்த்தைகள் அவரது வாழ்க்கை முறையையும், மக்களுக்காக அவர் எடுக்கும் முடிவுகளையும் பிரதிபலிக்கின்றன. தென்காசியில் அலுவலகம் அமைப்பது, பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வழங்குவது, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது – இவை அனைத்தும் அவரது தொலைநோக்கு பார்வையின் வெளிப்பாடுகள்.

மனைவியுடனான சர்ச்சை: ஒரு தனிப்பட்ட சவால்
ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிக் கதை மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சர்ச்சைகளும் பேசுபொருளாகியுள்ளன. 2021-ல் அவரது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசனுடன் விவாகரத்து கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தை அணுகியது தொடங்கி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல விவாதங்கள் எழுந்தன. பிரமிளா, ஸ்ரீதர் தனக்கு தெரியாமல் சோகோ நிறுவனத்தின் பங்குகளை உறவினர்களுக்கு மாற்றிவிட்டதாகவும், தன்னையும் ஆட்டிசம் பாதிப்பு உள்ள தனது மகனையும் கைவிட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இது ஃபோர்ப்ஸ் இதழில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், ஸ்ரீதர் வேம்பு இதற்கு தனது பதிலை உருக்கமாகவும், உறுதியாகவும் தெரிவித்தார். “நானும் பிரமிளாவும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மகனின் ஆட்டிசத்திற்காக போராடினோம். அவர் ஒரு சிறந்த தாய். ஆனால், 24 வயதாகும் எங்கள் மகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் தரவில்லை. அவர் அன்பான மக்களுடன் கிராமப்புற இந்தியாவில் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். ஆனால், இதை பிரமிளா என்னை கைவிடுவதாக புரிந்துகொண்ர். இதுவே எங்கள் திருமணம் உடைந்ததற்கு காரணம். என் மீது சுமத்தப்பட்ட பங்கு மாற்ற குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனை,” என்று அவர் விளக்கினார். மேலும், ஒரு ட்விட்டர் பதிவில் அவர், “நான் முன்பு தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்திருக்கிறேன், இதையும் தாங்குவேன். கிராமப்புற இந்தியாவில் நிறுவனங்களையும் திறன்களையும் உருவாக்குவதே என் வாழ்க்கையின் ஒரே நோக்கம். ஒருநாள் என் மகன் என்னுடன் இங்கு சேர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை,” என்று உருக்கமாக கூறினார். இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களையும், அதை எதிர்கொள்ளும் அவரது மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
ஒரு உண்மையான ஹீரோவை போற்றுவோம்
நம்மை சுற்றி ஸ்ரீதர் வேம்பு போன்ற உண்மையான ஹீரோக்கள் இருக்கும்போது, நாம் பெரும்பாலும் திரைப்படங்களில் வரும் நிழல் ஹீரோக்களை மட்டுமே தேடுகிறோம். ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகரை தமிழகம் முழுவதும் அறியும் அளவுக்கு, ஸ்ரீதர் வேம்புவை பற்றி தெரியாதது ஒரு கசப்பான உண்மை. ஆனால், இந்த சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் அவரை போன்றவர்களை அடையாளம் கண்டு, போற்றுவதன் மூலமே நாம் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும். ஸ்ரீதர் வேம்பு ஒரு தன்னம்பிக்கை மிக்க சாதனையாளர் மட்டுமல்ல, தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டு, மக்களுக்காக தொடர்ந்து உழைக்கும் ஒரு மனிதர். அவரது வாழ்க்கை நமக்கு ஒரு பாடம் – பணம் ஒரு கருவி மட்டுமே, உண்மையான செல்வம் மக்களை முன்னேற்றுவதிலும், சமூகத்திற்கு பங்களிப்பதிலும் தான் உள்ளது.

Related Posts
AIயால் மாறும் கல்வி: வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் ஐந்து படிப்புகள்!
ஸ்டார்ட்அப்களில் இந்த 2 பதவிகளை நான் ஒருபோதும் நியமிக்க மாட்டேன்: Surge AI CEO எட்வின் சென்
ஜூன் 2025இல் AI வளர்ச்சி தரவரிசை- விரிவான அறிக்கை!