ஆப்பிள் அப்டேட் என்றாலே திருவிழா தான். அப்படியொரு காலமிருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வதைக் கேட்கக் காத்திருந்தது ஒரு பெருங்கூட்டம். ரஜினி பட ரிலீஸ் போலக் கொண்டாடித் தீர்த்தனர் ஆப்பிளடிப்பொடிகள்.புதுப்புதுக் கருவிகளை அறிமுகப்படுத்தியபடி இருந்தது ஆப்பிள். பாமாயில் வாங்க ரேஷனில் காத்திருப்பதைப் போலச் சாரிசாரியாக ஆப்பிள் கடைகளின் முன் தவம் கிடந்தனர். அதன்பின் நிலைமை மாறியது. “அப்பிள் அப்டேட்டா … சரி ஓகே பார்க்கலாம்” என்று லெப்ட் ஹாண்டில் டீல் செய்யத் தொடங்கினர். இப்போது இன்னும் கொஞ்சம் கீழிறங்கியுள்ளது. “ஆப்பிள் அப்டேட்டா.. நோ… வேணாஞ்சாமி” என்று தெறித்து ஓடுகின்றனர். அதிலும் இப்போது வந்திருக்கிற 18.4 ஸ்பெஷல் சாதா. ஐபேடில் சில ஜீபி சைஸ் காட்டுகிறது. அப்படியென்ன தான் அப்டேட் செய்துள்ளார்கள்? முதலில் ஃபோனை 18.4க்கு மாற்றினேன்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றங்கள் வந்துள்ளன என்றனர். ஆப்பிள்காரர்கள் எப்பொழுதும் அப்படித்தான். ஒரு எமோஜி புதிதாக வந்தாலே “எங்க எமோஜி போல வருமா” என்று சூப்பர்லேட்டிவில் தான் பேசுவார்கள். அதே போலத் தான் இந்த ஐம்பதில் பலவும். ஒன்றிரண்டை மட்டும் சாம்பிளுக்குச் சொல்கிறேன். வால்யூம் இண்டிகேட்டரில் ஸ்பீக்கர் ஐக்கான் ஒன்றுள்ளது. அது முன்பெல்லாம் வெள்ளையாக இருக்கும். தற்போது வால்யூம் குறைக்கும் போது அது நீல நிறமாக மாறுகிறதாம். ஆப்பிள்தாசர் ஒருவரின் யூடியூப் சேனலில் விசிலடிக்காத குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்னொன்று. மொபைலில் சிக்னல் எவ்வளவு உள்ளதென்று காட்டும் ஐக்கான். நோட்டிஃபிக்கேஷனில் வரும். இதில் சிக்னல் உள்ள அளவிற்கு பார்களின் எண்ணிக்கையும் வண்ணமும் மாறுகிறதாம். இதெல்லாம் நோக்கியா 1100 காலத்திலேயே இருப்பது தானே என்கிறீர்களா? ஆப்பிளர்கள் அப்படித்தான். இந்த அப்டேட்டில் பேசுபொருளாகியுள்ளது தமிழ் ஃபாண்ட். எங்கள் ஆசிரியர் பாரா இதைப் பற்றி எழுதியிருந்தார். நாளிதழ்களில் செய்திவரும் அளவிற்கு இந்த எழுத்துரு உள்ளது. கண்களை உறுத்தும் விதமாக எப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை.
ஆப்பிள் எப்போதும் மார்தட்டிக்கொள்ளும் ஒரு சங்கதி உண்டென்றால் அது டிசைன். யூஸர் இண்டர்ஃபேஸ். அதன் நேர்த்தி. ஒரு புள்ளி வைத்தால் கூட அதுவே கோலம் போலிருக்கும். தமிழ் ஃபாண்ட் விசயத்தில் தவறவிட்டுவிட்டார்கள். ஆப்பிளுக்கும் அடிசறுக்கும். நல்லவேளை ஐபேடை இன்னமும் அப்டேட் செய்யவில்லை. ஆப்பிள் இண்டெலிஜென்ஸ். இன்னும் ஒரு பெரிய சிக்கல். இன்று ஏஐ அதிவிரைவாக வளர்ந்து வருகிறது. ஓப்பன் ஏஐ, கூகுள், க்ளாட், டீப் சீக் என ரேஸ் கார்கள் போல ஒருவரை ஒருவர் ஓவர்டேக் செய்து விரைந்துகொண்டிருக்கின்றனர்.ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் இந்தியன் 2 படத்தில் வந்த க்ராபிக்ஸ் தரத்தில் உள்ளது. கதறவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஆப்பிள் எல்லா விசயத்திலும் முன்னோடி என்று சொல்லிவிட முடியாது. பிற நிறுவனங்கள் தரும் வசதிகளைத் தான் இவர்களும் கொடுப்பார்கள். முன்னமே உள்ளது தான். ஆனால் எங்களிடம் அதுவே நிகரற்ற தரத்தில் கிடைக்கும். இதை செகண்ட் மூவர்ஸ் ஸ்ரேட்டஜி (Second movers strategy) என்கிறார்கள். இதுவே ஆப்பிளின் டிசைன் ஃபிளாஷஃபி. ஆனால் ஏ.ஐ விசயத்தில் இது ஒத்து வரவில்லை. மிகவும் லேட்டாகத் தான் தொடங்கினர். ஆனால் ஏஐயின் திசைவேகம் மிக அதிகம். ஆப்பிள், ஏஐ ரயிலை விட்டுவிட்டதாகத் தான் தோன்றுகிறது.
நோட்டிஃபிக்கேஷன் சம்மரி என்று ஒன்றைத் தொடங்கினர். பின்னர் இது தப்பாகவும் இருக்கலாம். நாங்கள் பொறுப்பல்ல என்றனர். அதே போலத் தான் இமேஜ் ப்ளேகிரவுண்ட். படங்களைத் ஏஐ மூலம் மாற்றலாம். ஆனால் உருப்படியாக எதையுமே இதைவைத்து என்னால் செய்ய இயலவில்லை. எனது படத்தையே “யாரு சாமி நீ” என்பது போல மாற்றிக்காட்டுகிறது. முரளியும் வடிவேலுவும் சேர்ந்து மாப்பிள்ளை ஒருவருக்கு மேக் அப் போடுவார்களே, அதுபோலத் தான் ப்ளேக்ரவுண்ட். இது போக, ஃபோட்டோஸ் ஆப் என்றொன்று வைத்திருக்கிறார்கள். எல்லா அப்டேட்டிலும் ஃபோட்டோஸ் ஆப் மாறியுள்ளது என அடித்துவிடுவார்கள். ஆனால் எப்பொழுதோ பிற இயங்குதளங்களில் வந்துவிட்ட வசதிகள் தான் இன்னமும் உள்ளன.
மொத்தத்தில் ஆப்பிள் அவ்வளவுதானா என்றால் இல்லை. ஆப்பிள் கருவிகள் இன்னமும் டாஸ்க் மாஸ்டர்கள் தான். எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் சீரியசாக எந்தவொன்றையும் செய்வதற்கு ஆப்பிள் கருவிகள் உகந்தவை. வேலைக்குள் நீங்கள் மூழ்கிய பின்னர் ஓ.எஸ், இண்டர்ஃபேஸ் என எல்லாமே மறைந்துபோகும். நீங்களும் உங்கள் வேலையும் மட்டும் தான். புரொடெக்டிவிட்டியைப் பொறுத்தமட்டும் சிறப்பானவை. வரும் வருடம் ஆப்பிளின் பொன்விழா ஆண்டு. இப்போது ஆட்டோ டிரைவர் மாணிக்கம் போல இருந்தாலும் அதற்கு பாட்ஷா போன்றதொரு வசீகரமான வரலாறு உள்ளது.
சுருக்கமாக இன்றைய சூழலில் ஆப்பிளும் மகேந்திர சிங் தோனியும் ஒன்று தான்.

Related Posts
எழுத்தையும் படத்தையும் சமமாகப் பார்க்கும் மல்டிமாடல் ஏஐ: தொழில்நுட்ப உலகின் புதிய மைல்கல்!
கூகுளின் ‘லிட்டில் செஃப்’: தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும் ‘ரெமி’ AI ஏஜென்ட்!
தடுமாறும் சட்டங்கள்.. தடம் மாறும் AI!