தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
சுமார் 15 அடி உயரம் கொண்ட பல்லக்கு எனப்படும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அலங்கார மின் விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின்புறம் பெரிய ஜெனரேட்டர் வசதியும் செய்திருந்தனர். ஊர் பெரியவர்கள், சிறுவர்கள் என பலரும் தேரை வடம் பிடித்து ஊர் முழுக்க இழுத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் உடைத்து வழிப்பட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணிக்கு தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது.
அதிகாலை 3 மணிக்கு கடைசியாக ஒரு வீட்டில் சாமிக்கு பூஜை, தேங்காய் உடைத்துவிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின் தேர் கோவிலுக்கு திரும்பும்போது சாலைக்கு மேல் உயர்மின்சார கம்பி அருகில் இருந்துள்ளது. இந்த ஆண்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளது. புதிய சாலை 2 அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது உயர்மின்சார கம்பி சாலைக்கு மேல் வரும் வகையில் இருந்துள்ளது. அப்போது, தேரை இழுத்தவர்கள் தேரை திருப்பும்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டது.
உயர் மின் அழுத்த கம்பி
இதனால், மீண்டும் தேரை பின்னாள் இழுத்து திருப்ப முடியாமல் சாலை தான் அகலமாக உள்ளதே என்று சாலையின் ஓரம் சென்று தேரை வளைத்து திருப்ப முயற்சித்துள்ளனர். அப்படி வளைத்து தேரை இழுக்கும்போது தேரின் உச்சியில் மடக்கி தூக்கும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த கும்பம் சாலையின் மேலே சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. அந்த மடக்கி தூக்கும் அமைப்பு தேரின் உயரத்தை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சாலையில் தேரை திருப்பும்போது தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தவில்லை. இதை தேரை இழுத்த நபர்களும், சிறுவர்களும், ஜெனரெட்டரை இயக்கி வந்த நபரும் கவனிக்கவில்லை. தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தாததால் தேரை திருப்பும்போது சாலையின் மேல் சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி தேரின் உச்சியை உரசியுள்ளது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் தேர் தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆண்கள் சிறுவர்கள் எனப் பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மின்சாரம் பாய்ந்த பலர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.
3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி
இதில் தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் 3 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தேர் விபத்தில் மோகன் (வயது 22), பிரதாப் (வயது 36), ராகவன் (வயது 24), அன்பழகன் (வயது 60), நாகராஜன் (வயது 60), செல்வம் (வயது 56), சாமிநாதன் (வயது 56), கோவிந்தராஜ், சந்தோஷ் (வயது 15), ராஜ்குமார் (வயது 14), பரணிதரன் (வயது 13) . காயம் அடைந்த 15 க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊர் மக்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு திரண்டு கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர். 94-வது ஆண்டாக இந்த தேர் விழா நடைபெற்று வருகிறது. இது வரை ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்பட்டதில்லை. இந்த முறை ஆறாத வடுவை ஏற்படுத்தும் அளவிற்கான விபத்து ஏற்பட்டு விட்டதாக ஊர் பெரியவர்கள் கதறி அழுதனர்.
தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பார்வையிட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts
🔬தமிழ்நாட்டில் ரூ.250 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் VLSI மையம்: AI எதிர்காலத்திற்கான அடித்தளம்!
“தமிழ்நாட்டில் AI வளர்ச்சி வேகத்தில் பின்தங்கியிருக்கிறதா?”- ஓர் அலசல்!
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதல் மற்றும் வளர்ச்சி!