தமிழகத்தில் 5 வயது வரை உள்ள குழந்தைகள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 5) போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை, கோவை ஆகிய மூன்று கழகங்களின் அனைத்து பேருந்துகளுக்கும் தேசிய பொதுப் பயன்பாடு அட்டையுடன் அனைத்து பொது போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை / பணப் பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை 70 கோடி ரூபாய் செலவில் கேஎஃப்ஜி ஜெர்மனி மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் அறிமுகப்படுத்தப்படும்.
பயண கட்டண சலுகை பெறுபவர்கள் (மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள் மற்றும் இதர) பயண கட்டண சலுகை அனுமதிச் சீட்டுகளைப் பெறுவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணச்சீட்டு வழங்கும் இடங்களுக்கு, பணி மனைகளுக்குச் செல்கின்றனர்.
பயணச் சீட்டுகள் பெறுவதற்காகப் பயணம் மேற்கொள்வதைக் குறைக்கும் வகையிலும் எளிதாகவும் வசதியாகவும் பயணச் சீட்டுகள் பெறுவதற்கு அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வலைதளம் அல்லது இ சேவை மையம் வாயிலாக இணையதள பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
பயணம் செய்யும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்துகளின் வருகை புறப்பாடு குறித்த நிகழ்நேர தகவல்கள் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பேருந்து நிலையங்களில் 3 கோடி ரூபாய் செலவில் இணையவழி தகவல் அமைப்பு மூலமாகக் காட்சிப்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். (தற்போது 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச் சீட்டு வழங்கப்படுகிறது).
பயணிகள் நீண்ட தூரம் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள் ரயில் போன்றவற்றில் பயணிக்கும் பயணிகளை ஈர்க்கவும் விழா நாட்கள் நீங்கலாக இதர நாட்களில் இணைய வழி வாயிலாக, பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.

திருச்சி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
போக்குவரத்துத் துறையில் பொதுமக்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நேரடியாக அணுகாமல் கீழ்க்கண்ட சேவைகளைக் கணினி வழியாகப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
*ஓட்டுநர் உரிமத்தில் ஏதேனும் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்தல்,
*போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தினை இணையத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குத் தெரிவித்தல்,
*பதிவுச் சான்றிதழ் தவணைக் கொள்முதல் விபரத்தினை மேற்குறிப்பு செய்தல் ஆகியவற்றைக் கணினி வழியாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்துவதற்கு ஏதுவாக சிறப்பு விதிகள் 2012 இல் திருத்தம் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

Related Posts
🔬தமிழ்நாட்டில் ரூ.250 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் VLSI மையம்: AI எதிர்காலத்திற்கான அடித்தளம்!
“தமிழ்நாட்டில் AI வளர்ச்சி வேகத்தில் பின்தங்கியிருக்கிறதா?”- ஓர் அலசல்!
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதல் மற்றும் வளர்ச்சி!