October 19, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்!

ஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார். அவருக்கு வயது 46.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் அந்த அணிக்காக சைமண்ட்ஸ் விளையாடியுள்ளார். கடந்த 1998ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டியில் அறிமுகமான சைமண்ட்ஸ் பேட்ஸ்மேன் ஆகவும், பந்துவீச்சாளராகவும் குறிப்பிடதக்க பங்களிப்பை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில், நேற்று குயின்ஸ்லாண்ட்(Queensland) பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், 46 வயதான சைமண்ட்ஸ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து குயின்ஸ்லேண்ட் காவல் அதிகாரிகள் கூறும்போது, சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது, சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது. காரில் அவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார். அவரை காப்பாற்ற துணை மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அதில் பலனில்லை என கூறியுள்ளார்.

உயிரிழந்த சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

அவர் அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார். ஆல்ரவுண்டரான அவர், பேட்டிங் செய்வதுடன் நடுத்தர வேகம் மற்றும் சுழற்பந்து என தேவைக்கேற்றபடி பந்து வீசவும் செய்வார். சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.

நடப்பு ஆண்டில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், சைமண்ட்சும் விபத்தில் உயிரிழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Spread the love
error: Content is protected !!