தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை விதித்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இந்தத் தளங்கள் முடக்கப்பட்டன. அந்த சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக போலியான செய்திகளை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த யூடியூப் சேனல்களை முடக்கி நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில், மேலும் 16 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” நாட்டின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொது ஒழுங்கு மற்றும் மதநல்லிணக்கம் குறித்து தவறான தகவல்கள், உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பியதற்காக 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த 10 சேனல்களும், பாகிஸ்தானை சேர்ந்த 6 செய்திச் சேனல்களும் அடங்கும். இந்த சேனல்களின் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 68 கோடி ஆகும். ஐடி விதிகளின் கீழ், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts
ஏஐ உலகை வியக்க வைத்த பாரத மண்டபம்: இந்தியா ஏஐ தாக்கம் உச்சிமாநாடு!
ஏ ஐ துறையில் உலக குருவாகும் இந்தியா: டெல்லி உச்சிமாநாட்டின் சிறப்பம்சங்கள்.
இந்தியா & AI: 2035-க்குள் $607 பில்லியன் பொருளாதார இலக்கு