September 11, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

உலக பத்திரிகை சுதந்திர நாள்

லகில் நடக்கும் நிகழ்வுகளை, அதன் உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகைகள். ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன. மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம். இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும். அப்படியான பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 1993 முதல், மே 3ம் தேதி, சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உள்ளன. அதன் பெயர் மற்றும் மொழிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கிறதே தவிர அதன் செயல்பாட்டில் அல்ல. பல்வேறு சூழல்களையும் சமாளித்து, மக்களுக்கு செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்களின் சமூக சேவை பாராட்டுக்குரியது.

மிகுந்த ஆபத்து காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு ‘யுனெஸ்கோ’ சார்பில், 1997 முதல் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இது ‘குல்லர்மோ கானோ இசாசா’ என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. ‘எல் எஸ்பெக்டேட்டர்’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலின் சட்டவிரோத கடத்தலை அம்பலப்படுத்தியதால், பத்திரிகை அலுவலகத்தின் வாயிலில், 1986ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளும் கொல்லப்பட்டனர். அந்த பத்திரிகையாளரின் சேவையை பாராட்டி, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் விடுதலைக்கு பிறகு இந்தியா எத்தனையோ பிரதமர்களை சந்தித்து இருக்கிறது. எல்லோருமே பத்திரிகை சுதந்திரத்தை மதித்திருக்கிறார்கள். பத்திரிகையளர்களை சந்தித்து நாட்டு நிலைமையை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு பயணத்தின்போது பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள். வெளிநாடு ஒன்றுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து இந்திய பத்திரிகையாளர்களிடம் விவரங்களை வெளிப்படையாக தெரிவிப்பது அவர்கள் வழக்கம். நாடு திரும்பும்போது விமானத்திலேயே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள்.

ஆனால், இந்திய வரலாற்றில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்கவே மறுத்து எட்டு ஆண்டுகளை தாண்டப் போகும் ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். ஆனால், பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்து தனது பதவிக்காலம் முழுவதையும் கடத்திய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும்தான் பலம் வாய்ந்தவர்கள் என்றும் இரும்பு மனுஷி, துணிச்சல் மிகுந்தவர் என்று ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றன என்பதுத் தனி எபிசோட்.

Spread the love
error: Content is protected !!