October 15, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

டென்மார்க் போன இடத்தில் ஒற்றை கையால் டோல் கருவி இசைத்த பிரதமர் மோடி- வைரல் வீடியோ !

ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு 2ம் நாளான நேற்று, பிரதமர் மோடி டென்மார்க் வந்தடைந்தார். இது பிரதமர் மோடியின் முதல் டென்மார்க் பயணம் என்பதால், அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கோபன்ஹேகன் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். அதன் ஒரு பகுதியாக டோல் இசைக் கலைஞர்கள் சுற்றி வரிசையாக நின்று அக்கருவியை இசைத்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்நிலையில் அவர்களுடன் பிரதமர் மோடியும் சேர்ந்து ஒரு கையில் டோல் கருவியை இசைத்து மகிழ்ந்தார். அவர்கள் இசைக் கலைஞர்களுக்கு மத்தியில் ஒரு கையில் டோல் இசைப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

பின்னர், மரியன்போர்க்கில் உள்ள பிரடெரிக்சனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள பரந்த புல்வெளியில் மோடி-பிரடெரிக்சன் உரையாடினர். பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுக நவீனமயமாக்கல், உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பத் துறையில் டென்மார்க்கின் முதலீடுகளை இரு தலைவர்களும் வரவேற்றனர். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய இரு தலைவர்களும், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக டென்மார்க்கின் ஆதரவை மீண்டும் ஒருமுறை பிரடெரிக்சன் தெரிவித்தார். மேலும் இரு தலைவர்களும் விவசாயம் தொடர்பான ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்து, பால் உற்பத்திக்கான சிறப்பு மையத்தையும் நிறுவ ஒப்புக் கொண்டார்.

பின்னர் இரு தலைவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியா அரசின் எளிதாக தொழில் செய்வதற்கான நடவடிக்கைகள் மூலம் அந்நிறுவனங்கள் பயனடைகின்றன. தற்போது இந்தியாவில் உள்கட்டமைப்பு, பசுமைத் தொழில்கள் மற்றும் ஓய்வூதிய நிதித் துறைகளில் டென்மார்க் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய முதலீடு வாய்ப்புகள் உள்ளன. இந்தியா -ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவாகும் என நம்புகிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து, டென்மார்க் தொழில்துறை வட்டமேசை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதே போல, டென்மார்க் வாழ் இந்தியர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றினார். டென்மார்க்கின் ராணி 2ம் மார்க்கரீத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இன்றைய 3ம் நாள் பயணத்தில் பிரதமர் மோடி 2வது இந்தியா-நார்டிக் நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் செல்லும் அவர் பாரிசில் அந்நாட்டு அதிபர் மேக்ரானை சந்தித்து பேசுகிறார்.

* உடனடியாக போர் நிறுத்தம்

டென்மார்க்கில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் பேட்டி அளித்த மோடி, ‘‘உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், நெருக்கடிக்கு தீர்வு காண இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார்.

டென்மார்க் அதிபர் பிரடெரிக்சன் பேசுகையில், ‘‘உக்ரைன் மீதான போரை ரஷ்ய அதிபர் புடின் நிறுத்த வேண்டும், கொலைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் தெளிவான செய்தி. இந்த விஷயத்தில் இந்தியா தனது செல்வாக்கை காட்டும் என நம்புகிறோம்’’ என்றார்.

Spread the love
error: Content is protected !!