ஐபிஎல் 15ஆவது சீசன் தொடரில் நேற்று (ஏப்ரல் 24) இரவு நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் மும்பை அணி எட்டாவது தோல்வியை சொந்த மைதானத்தில் சந்தித்துள்ளது.
ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். பும்ரா பந்து வீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டி காக் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் மனிஷ் பாண்டே களம் புகுந்தார். அவர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ராகுல் அரை சதம் கடந்தார். பொல்லார்டு பந்தில் 22 ரன்களில் அவுட்டாகி அவர் மீண்டும் ஒருமுறை லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் குருனால் பாண்டியா வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதைத் தொடர்ந்து தீபக் ஹூடாவும் 10 ரன்களில் நடையைக் கட்ட மறுமுனையில் ராகுல் தொடர்ந்து அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 61 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது மும்பைக்கு எதிராக அவரது இரண்டாவது சதமாகும்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ரவி பிஷ்னாய் சுழலில் இஷான் கிஷன் 8 ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து வந்த பிரெவிஸ் 3 ரன்களில் அறிமுக வீரர் மொஹ்சின் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் சிறப்பாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, குருனால் பாண்டியா பந்துவீச்சில் 39 ரன்களில் வெளியேறினார். மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களம் புகுந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒருகட்டத்தில் வெற்றிப்பாதையை நோக்கி சென்ற மும்பை அணி தடுமாற தொடங்கியது. இருப்பினும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் பொல்லார்டு – திலக் வர்மா ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடி வந்த திலக் வர்மா 38 ரன்களில் ஹோல்டர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி ஓவரில் மேலும் மூன்று விக்கெட்டுகள் சாய மும்பை அணியின் தோல்வி உறுதியானது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் மும்பை அணி எட்டாவது தோல்வியைச் சொந்த மைதானத்தில் சந்தித்துள்ளது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 25) இரவு நடக்கும் 38ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. வழக்கத்துக்கு மாறாகத் தடுமாறிக் கொண்டிருக்கும் சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி 6 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் தோல்விகள் குறித்து ரோகித், “ கனமான களத்திலும் நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். பேட்டிங்கில் தான் சொதப்பி விட்டோம். இதுபோன்ற இலக்கை துரத்தும் போது பார்ட்னர்ஷிப் அவசியம். ஆனால் மிடில் ஓவர்களில் சிலரின் பொறுப்பே இல்லாத ஷாட்கள், எங்களை தோல்விக்கு கொண்டு சென்றது. அதில் நானும் அடங்குவேன். அதுதான் வலிக்கிறது மிடில் ஆர்டரில் யாரேனும் ஒருவராவது கடைசி வரை ஆட வேண்டும். ஆனால் இங்கு அது நடக்கவே இல்லை. எதிரணிகளில் அது மிகவும் பொறுப்பாக நடப்பது நமக்கு நடக்கவில்லை என்பது தான் வலிக்கிறது. முதலில் நாங்கள் செட்டில் ஆன டீம் தானா என்பது சந்தேகமாக உள்ளது. நாட்டிற்காக விளையாடும்போது, வீரர்களின் பணி வேறு. ஆனால் இங்கு அனைவரும் வேறுமாதிரியான ஆட்டத்தை காட்ட வேண்டும். அதுதான் எனக்கு கவலையாக உள்ளது. எனினும் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளை தந்துள்ளேன் என நினைக்கிறேன் என ரோகித் கூறியுள்ளார்.
Related Posts
விளையாட்டு துறையில் ஏஐ என்ன விளையாடும்?
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்!
தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆனார்.