October 19, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம் திருநாளின்று!

முருகன், தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் கொண்டாடி மகிழும் தெய்வம். அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகும். இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. தைப்பூச நாளில்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நீர் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன. அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு தைப்பூசம் இன்று (பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி) தை மாதம் 22ம் தேதி வந்துள்ளது.இந்த தைப்பூசம் தமிழர்களின் பாரம்பர்யத் திருவிழா. தமிழகம் முழுவதும் வேளாண் குடிகள் நிறைந்த பூமி. தை மாதம் அறுவடைக்காலம். மக்கள் தங்கள் வயல்களில் விளைந்த விளைபொருள்களை முருகனுக்குச் சமர்ப்பிக்கும் பொருட்டுக் காவடி எடுத்துக்கொண்டுவந்து முருகனை வழிபட்ட தினம்

விரிவாகச் சொல்வதானால் இந்த தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டுவரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள் தான் தைபூசமாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தைப்பூசத்தின் சிறப்புகள்:

இராமனுக்கு தம்பியாகப் பிறந்து அவன் பொருட்டு தனக்கு கிடைத்த அரசுப் பதிவியையும் துச்சமாக மதித்து துறந்த,அப்பேற்பட்ட பரதன் பிறந்த நட்சத்திரம் “பூசம்”. பூசத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சகோதர/சகோதரி பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள். தை மாசத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம்.

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.

திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும். சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது. சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம். வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் – ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான். அதன் காரணமாகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

தைப்பூச விரத முறை:

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Spread the love
error: Content is protected !!