October 19, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

மனித நேயம் மிகுந்த நம் சமுதாயத்தில் இருந்து மனிஷாக்கு வந்து குவிந்த உதவிகள்.!

சென்னை பெரம்பூர், துளசிங்கம் தெருவில் வசித்து வருகிறார் சிறுமி மனிஷா என்கிற சிறப்பு குழந்தை. கொடிய நோய்க்கு தன் தந்தையை அண்மையில் பறிகொடுத்த இந்த சிறுமி தாயின் அரவணைப்பில் வளர்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சகோதரியும் இருக்கிறார்.

டாக்டர். நிர்மலா ஜம்பு (அம்பத்தூர்) நம்மிடம் தொடர்பு கொண்டு இந்த சிறப்பு குழந்தைக்கு உதவும்படி கேட்டிருந்தார். இந்த சிறுமியால் உட்கார கூட முடியாது. இதன் தாயார் மிகவும் சிரமப்பட்டு பராமரித்து வருகிறார். முடிந்தால் நேரில் சென்று பார்த்து வாருங்கள் என்று தெரிவித்தார்.

இந்த சிறப்பு குழந்தையை நேரில் சென்று பார்த்து வர முடிவு செய்தேன்.மனித நேயர், ராஜஸ்தான் எல்லை படையில் பணிபுரியும் நண்பர் திரு. சோலைராஜ் அவர்களை தொடர்பு கொண்டு இந்த குழந்தை பற்றி தெரிவித்தேன்.

அவர், ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மளிகைப் பொருட்களை உடன் எடுத்துச் சென்று அந்த சிறுமியின் குடும்பத்திற்கு கொடுங்கள் என்று கூறி அதற்குரிய தொகையை அனுப்பி வைத்தார்.

மளிகை பொருட்களுடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்.
ஒரு சாதாரண நாற்காலியில் உட்கார வைத்து அந்த குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் தாயார். குழந்தையின் கைகள் இரண்டும் கை பிடிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

கட்டாவிட்டால் நாற்காலியிலிருந்து வழுக்கு கீழே வந்து விடுவாள் உணவை தொடர்ந்து கொடுக்க முடியாது என்றார் அந்த அருமை சகோதரி.

பால் முகம் மாறாத அந்த சிறப்பு குழந்தை என்னைப் பார்த்து சிரித்தாள். என் மனம் அந்த குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து கொண்டிருந்ததால், என்னால் அக்கணத்தில் சிரிக்க இயலவில்லை.

சிறப்பு பள்ளி எதற்காவது அழைத்துச் செல்கிறீர்களா என்று கேட்டேன்.

ஆமாம் அந்தப் பள்ளியில் இவருக்காக சிபி சேர் எனப்படும் ஒரு சிறப்பு நாற்காலி உள்ளது .அதில் அமர வைத்து உணவு கொடுப்பது, போன்ற வேலைகளை கொஞ்சம் எளிதாக செய்ய முடியும்” என்றார்.

“குழந்தையை பார்ப்பதற்கே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும், குடும்ப செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்”என்று கேட்டேன்.

“என் உடன் பிறந்த சகோதரர்கள் அவர்களால் முடிந்த அளவு உதவுகிறார்கள். முன்பு சில காலம் வீட்டில் இருந்தபடி புடவைகள் உள்ளிட்ட பெண்கள் உடைகளை வாங்கி விற்பனை செய்து இருக்கிறேன். அதை மீண்டும் செய்யும் எண்ணம் உள்ளது” என்றார்.

மளிகைப் பொருட்களை அவர்களிடம் வழங்கி விட்டு, எங்களால் இயன்ற உதவியை விரைவில் செய்கிறோம் என்று சொல்லி விடை பெற்றேன்.

அந்த சிறப்பு குழந்தையின் முகம் என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருந்தது. சீக்கிரம் அக்குழந்தைக்கு சிறப்பு நாற்காலி வாங்கி கொடுக்க வேண்டும், கூடவே புடவைகள் வாங்கி கொடுத்து சிறுமியின் தாயாருக்கு வீட்டில் இருந்தபடியே வருவாய் ஈட்டும் பணியை தொடங்கி வைக்க வேண்டும்.

இது தொடர்பான தகவல்களை நண்பர்களிடம் பகிர்ந்தேன். உடனடியாக நல்ல பதில்களைப் பெற்றேன்.

ஈரோடு, கொல்லம் பாளையத்தைச் சேர்ந்த மனித நேயர் ஈரோடு கிங் பூபதி( எ) இரா‌. குமாரசாமி சிறப்பு நாற்காலி வாங்குவதற்காக ரூ 17,000 அனுப்பினார். தொடர்ந்து உதவிகளை கருணை உள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் அனுப்பிவைத்தனர்.

சிறப்பு நாற்காலி, 25 கிலோ அரிசி மூட்டை, ஒரு ஏர் கூலர் ஃபேன் , 40 புடவைகள் ஆகியவற்றுடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றோம்.

அருமை நண்பர் கோவிந்த ராஜ் ,சமூக ஆர்வலர்கள் பில்லா ஏ. அன்பு செழியன், செல்வம்(கை கொடுக்கும் கை தொண்டு நிறுவனம்), அன்பு சகோதரி அலமேலு( பெரம்பூர்) ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

மனிதநேயத்தின் சின்னமாக வலம் வரும் பாலசுப்பிரமணி ஐயா தம் நண்பர்கள் உதவியுடன் சிறுமிகள் இருவருக்கும் புத்தாடைகள் மற்றும் பெரிய கேக் வாங்கி வந்தார்.

சிறுமி மனிஷாவை சிறப்பு நாற்காலியில் அமரவைத்து கேக் வெட்ட வைத்தோம். அந்த இல்லத்தில் மகிழ்ச்சி ஒளி பொங்கியது. சிறுமிகள் இருவருக்கும் புத்தாடைகளையும், அவர்களுடைய தாயாருக்கு வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவதற்காக 40 புடவைகளையும் கொடுத்தோம்.

“இந்த சமுதாயம் உங்களுக்கு ஆதரவாக எப்போதும் உடனிருக்கும்” என்ற நம்பிக்கை விதையையும் அந்த வீட்டில் விதைத்து விட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

சிறப்பு குழந்தை மற்றும் குடும்பத்திற்கு உதவிய மனித நேயர்கள்:

சிறப்பு நாற்காலி(Rs 17000)

ஈரோடு கிங் பூபதி( எ) குமாரசாமி.

மளிகை பொருட்கள்:
எல்லை பாதுகாப்பு படை வீரர்
திரு.சோலை ராஜ்.

25 கிலோ அரிசி.
திரு.ஜே.சிலம்பரசன்.
எஸ்.எஸ்தர்
(எமிமா நினைவு அன்பின் அறக்கட்டளை).

Dr.SAMS FAMILY Rs 6000.
Mr. PRABHU FAMILY
Rs 2500

Mr.CHANDRASEKAR & ELANGO : Rs 2000
(Rotary club,Ayanam bakam, Chennai).

Mr. RAJA (T.Nagar)
Rs 1000.
Rs 100(No Name).

POLICE FAMILY (VEPERY)

Mr.STEPHEN Rs 500
Ms .MARY LATHA Rs 1000
Mr.KANNAN Rs100
Ms.MARY HELAN
Rs.500
Ms.MARY GLORIA
Rs 2000.

இவ்வளவு விவரங்களையும் நாம் குறிப்பிடுவதற்குக் காரணம், நம் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது ஒருபுறமிருக்க,
எவ்வளவு மனிதநேய கருணை உள்ளங்கள் இந்த சமுதாயத்தில் நிறைந்து உள்ளார்கள் என்பதை காட்டவும் தான்.

பெரிய பெரிய இயற்கை சீற்றங்களையும் தொற்று நோய்களையும் நம்மால் எளிதாக கடந்து போக முடிந்ததற்கு இந்த மண்ணின் மகத்துவம் தான் காரணம்.

இந்த மகத்தான மனித நேய சக்திகளை கருணை உள்ளங்களை உதவும் கைகள் குழு நண்பர்கள் சார்பில் வணங்கி வாழ்த்துகிறேன்.
🙏🙏🙏💐💐💐

‌ – புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739

Spread the love
error: Content is protected !!